வட்டமலைகரை அணைக்கு கள்ளிபாளையம் மதகில் இருந்து 25 ஆண்டுக்கு பின் தண்ணீர் திறப்பு | திருப்பூர் செய்திகள் | Dinamalar
வட்டமலைகரை அணைக்கு கள்ளிபாளையம் மதகில் இருந்து 25 ஆண்டுக்கு பின் தண்ணீர் திறப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 நவ
2021
15:10

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள வட்டமலைகரை அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கவேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பி.ஏ.பி., தொகுப்பணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால் கள்ளிபாளையம் மதகில் இருந்து 25 ஆண்டுக்கு பின் இன்று (நவ.,28) தண்ணீர் திறக்கப்பட்டது.

கடந்த 1980ம் ஆண்டு வெள்ளகோவில் அருகே 700 ஏக்கர் பரப்பளவில் 26 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கும் வகையில் 0.53 டி.எம்.சி., நீர் இருப்பு வைத்து பாசனத்துக்கு நீர் திறக்கும் வகையில் வட்டமலைகரை அணை கட்டப்பட்டது. இந்த அணையின் மூலம் வெள்ளகோவில், தாசநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், புதுப்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 6,050 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் வாய்க்கால்கள் வெட்டப்பட்டன.
பி.ஏ.பி., பாசன கால்வாய் கசிவு நீர் மூலமும், பல்லடம், பொங்கலூர், அனுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையால் 350 சதுர மைல் பரப்பு நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து சேகரமாகும் நீர், வட்டமலைகரை ஓடையில் வரும் தண்ணீரை தேக்கி வைத்து பாசனத்துக்கு உதவும் வகையில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது.
மேலும், பி.ஏ.பி., அணைகளில் உபரியாக நீர் இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து 15 நாட்களுக்கு 250 கன அடி வீதம் பல்லடம் அருகே உள்ள கள்ளிபாளையம் ஷட்டரில் இருந்து நீர் திறக்க அரசாணையும் உள்ள நிலையில், 1995ம் ஆண்டுக்கு பிறகு ஒரு முறை கூட பி.ஏ.பி., அணையில் இருந்து நீர் திறக்கப் படவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக அணையை சுற்றி உள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பொய்த்து போய் கால்நடைகளுக்கு கூட பணம் கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் திருமூர்த்தி அணையின் மூலம் பி.ஏ.பி., கால்வாயில் உள்ள கள்ளிபாளையம் ஷட்டரில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதை அடுத்து பொதுப்பணித்துறை இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.
முன்னதாக மதகுகள் சரிவர பராமரிக்கப் படாததாலும், வட்டமலை ஓடை மதகில் நீர் கசிவு ஏற்படாமல் இருக்க கதவை கான்கிரீட் போட்டு அடைத்ததாலும் தண்ணீர் திறக்க முடியவில்லை. இதனால் ஷட்டரை துாக்க முயன்றபோது அது உடைந்து போனது. இதையடுத்து ஷட்டரின் திறக்கும் பகுதியில் உள்ள நட்டுகளை காஸ் வெல்டு மூலம் அகற்றி விட்டு மீண்டும் சீர் செய்யும் பணியில் நீர்ப்பாசனத் துறை பணியாளர்கள் ஈடுபட்டனர். கடந்த 28 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் வட்டமலை அணைக்கு தண்ணீரை திறந்து விட்டனர். இந்த பணிகளை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டு விரைந்து நீர் திறக்க அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
கடந்த 25 ஆண்டுகள் கழித்து வட்டமலை அணைக்கு கள்ளி பாளையம் ஷட்டர் வழியாக பி.ஏ.பி., நீர் திறப்பை காண வெள்ளகோவில் வட்டமலைகரை அணை பாசனப் பகுதி விவசாயிகள் ஷட்டர் பகுதியில் இன்று காலை முதல் கூடியிருந்தனர். தண்ணீர் திறப்புக்கு முன் பூஜைகள் செய்யப்பட்டு விவசாயிகள் இணைந்து மதகை திறந்து விட்டனர். இதையடுத்து அங்கு வந்திருந்த விவசாயிகள் தண்ணீருக்கு மலர் துாவி வரவேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X