திருவாடானை : மழையால் தரைப்பாலங்களுக்கு மேல் தண்ணீர் செல்வதால் சேதமடைவதோடு போக்குவரத்து பாதிப்பும் தொடர்வதால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.
திருவாடானை தாலுகாவில் சூச்சனி, நகரிகாத்தான், மெக்கவயல், அறுநுாற்றிவயல், தோமையாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தரைப்பாலங்கள் உள்ளன. கடந்த இரு நாட்களாக பெய்து வரும் மழையால் இப்பாலங்களுக்கு மேல் தண்ணீர் செல்கிறது. வருவாய்த்துறையினர் பார்வையிட்டு போக்குவரத்திற்கு தடை விதித்தனர்.
30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்காகவும், வீட்டிற்கு வேண்டிய பொருட்கள் வாங்க தேவகோட்டை, திருவாடானை, மங்களக்குடிக்கு மாற்று பாதைகளில் பல கி.மீ. துாரம் சுற்றி செல்வதால் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் நாளுக்கு நாள் மழை நீர் அதிகரிப்பதால் பாலத்தின் ஓரங்களில் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்து வருகிறது. அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.