ராமநாதபுரம் : வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கண்மாய் பாதுகாப்பு கருதி வெள்ள நீர் வேறு கண்மாய்களுக்கு கால்வாய் வழியாக வெளியேற்றப்படுகிறது.
வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.இதனால் உபரி நீர் முழுமையாக திறக்கப்படுகிறது. பரமக்குடி வைகை ஆற்றில் பத்தாண்டுகளுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை 5:00 மணி நிலவரப்படி மாவட்ட எல்லையான பார்த்திபனுார் ரெகுலேட்டரில் இருந்து வினாடிக்கு 7000 கன அடி நீர் ராமநாதபுரத்திற்கு வருகிறது.
இந்த வெள்ள நீர் தெளிச்சாத்தநல்லுார் வலது, இடது புற கால்வாய்களில் திறக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வரும் வைகையாற்றில் மேலும் அபரிதமான வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது.பெரிய கண்மாயில் தற்போதைய நிலையில் 1500 கன அடி நீர் 4 அடி உயரத்திற்கு உள்ளது. கண்மாய் கொள்ளளவு 7 அடி. நேற்று மதியம் 2:30 மணிக்கு பெரிய கண்மாய்க்கு 5000 கன அடி நீர் வந்தது.
பொதுப்பணித்துறை நீர்வள ஆதார பிரிவு நிர்வாக பொறியாளர் மதன சுதாகரன் கூறுகையில், தொடர்ந்து அதிக மழை பெய்யும், என அறிவிக்கப்பட்டுள்ளதால், பெரிய கண்மாய் பாதுகாப்பு கருதி கண்மாய்க்குள் 1500 கன அடி நீர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.மேலும் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு செல்லும் வகையில் கீழநாட்டார் கால்வாய், மேல நாட்டார் கால்வாய்களிலும், களரி கண்மாய்க்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பெரிய கண்மாயில் 5 அடி உயரம் வரை மட்டுமே தண்ணீர் தேக்க திட்டமிட்டுள்ளோம், என்றார்.