வெட்டி கடத்தப்படும் மரங்கள் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
வெட்டி கடத்தப்படும் மரங்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 நவ
2021
23:15

மேட்டுப்பாளையம்:மரங்கள் வெட்டி கடத்தப்படுவதை தடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்த்துவருவதாக சமூக ஆர்வலர்கள் கொதிக்கின்றனர்.மேட்டுப்பாளையம் நகரில், 33 வார்டுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வார்டுகளில், பல வகையான மரங்கள் நன்கு வளர்ந்து, பெரிய கிளைகளுடன் பரந்துவிரிந்து காட்சியளிக்கின்றன. நல்ல நிழலையும், காற்றோட்டத்தையும் இயற்கையின் பரிசாக வழங்கிவரும் இந்த மரங்களை, பகலிலேயே ஒரு கும்பல் வெட்டி கடத்திவருவதாக புலம்பல்கள் எழுகின்றன.சமீபத்தில், காட்டூர் பள்ளிவாசல் அருகே, நன்கு வளர்ந்துள்ள மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளன. அதேபோல், மணி நகரில் பழைய நகராட்சி பள்ளி கட்டட வளாகத்தில், நன்கு வளர்ந்துள்ள மரங்களையும், கிளைகளையும் வெட்டி கடத்தும் பணிகளில், ஒரு கும்பல் ஈடுபட்டு வருவது, மனதை புண்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் குமுறுகின்றனர்.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:நகராட்சியில் உள்ள பெரிய மரங்களை, ஒரு கும்பல் கண் வைத்து, பகலிலேயே வெட்டி கடத்திவருகிறது. கேள்வி எழுப்பினால், நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளதாக மரம் வெட்டுவோர் கூறுகின்றனர். அதன் பின்பும் எதிர்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில், மரங்களை இந்த கும்பல் வெட்டி கடத்துகிறது. மரங்களை வெட்டி கடத்தும் கும்பலுக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.மரங்கள் தான் மழை தரும் கொடை வள்ளல்கள். இதனை அடுத்த தலைமுறைக்கு அழியாமல் எடுத்துசென்று, வழிகாட்ட வேண்டியது நமது கடமை. எனவே, நகரில் மீதம் உள்ள மரங்களை, வெட்டி கடத்தும் கும்பலிடம் இருந்து பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.தெரியவில்லை!நகராட்சி கமிஷனர் வினோத்திடம் கேட்டபோது,''மரங்கள் வெட்டுவது குறித்து தகவல் ஒன்றும் தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X