அன்னுார்:அரசு சொத்தை ஆக்கிரமித்துள்ளதாக கோவில் கமிட்டிக்கு, வருவாய் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.அன்னுார் அருகே பொன்னே கவுண்டன்புதுார், நால்ரோட்டில், 100 ஆண்டுகள் பழமையான பொன் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த, கோவிலை புனரமைத்து, விஸ்தரிப்பு செய்யும் பணி, 10 நாட்களுக்கு முன் துவங்கியது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கோவை வடக்கு ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், அங்கு ஆய்வு செய்தபோது கோவில் அமைந்துள்ள இடம் மந்தை புறம்போக்கு என தெரியவந்தது.இதையடுத்து கட்டுமான பணிக்கு வருவாய் துறையினர் தடை விதித்தனர். நேற்று அன்னுார் தெற்கு வருவாய் ஆய்வாளர் சங்கர்லால், கோவில் கமிட்டி தலைவர் செல்வராஜ் மற்றும் கமிட்டி உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள நோட்டீசில், 'பொன்னே கவுண்டன்புதுார், நால்ரோட்டில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து உள்ளீர்கள். அரசு நிலத்தில் அனுமதி இல்லாமல் உள்ள கட்டடங்கள், கட்டுமானங்கள் ஆகியவற்றை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என்பதற்கான காரணத்தை, வரும், 4ம் தேதிக்குள், நேரில் அல்லது எழுத்து மூலமாக நீங்கள் தெரிவிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.நோட்டீசில் நிலம் அரசு புறம்போக்கு மந்தை எனவும் அதில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி, 977 சதுரமீட்டர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நுாறு ஆண்டுகளுக்கு மேலாக பொது மக்கள் வழிபட்டு வந்த கோவிலை ஆக்கிரமிப்பு என்று கூறி அகற்றுவதற்கு நோட்டீஸ் அனுப்பிய வருவாய்த்துறையின் நடவடிக்கை வருத்தமளிப்பதாக, கோவில் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.