சூலுார்:போலியான ஆவணங்களை கொண்டு ஊராட்சி நிதியில் முறைகேடு செய்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்டது செலக்கரச்சல் ஊராட்சி. இங்கு, மரகதவடிவு ஊராட்சி தலைவராக உள்ளார். இந்த ஊராட்சியில் நடந்த பணிகளில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.ஐந்தாவது வார்டு உறுப்பினர் ஆறுச்சாமி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனு:செலக்கரச்சல் ஊராட்சி தலைவரின் கணவர் கருப்புசாமி ஒப்பந்ததாரராக உள்ளார். செலக்கரச்சல் நுாலகம் முதல் ராஜகோபால் நாயுடு வீதி வரை, 'பேவர் பிளாக்' பதித்ததாக, 6.50 லட்சம் ரூபாய் பணம் ஊராட்சி நிதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதில், போலியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி தலைவரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், குடிநீர் குழாய் பதிப்பு, கான்கிரீட் ரோடுகள், கொரோனா தடுப்பு பணிகளில் நிதி முறைகேடுகள் நடந்துள்ளன. இதுகுறித்து உரிய ஆய்வு செய்து தலைவர் மற்றும் அவரது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.