மடத்துக்குளம்:மடத்துக்குளம் பேரூராட்சி துாய்மைப்பணியாளர்களுக்கு கையுறை, காலணி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.மடத்துக்குளம் பகுதியில், 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் உள்ளனர். இவர்கள் வீடுகள் மற்றும் இங்குள்ள தொழில் நிறுவனங்கள், கடைகள், பேக்கரிகளிலிருந்து வெளியேற்றப்படும் குப்பை, கழிவுகள், தெருக்களின் ஓரங்களில் உள்ள குப்பைத்தொட்டிகளில் கொட்டப்படுகிறது.இது தவிர, பல இடங்களில் பாதைகள் மற்றும் ரோடுகளின் ஓரங்களிலும் கழிவுகள் வீசப்படுகிறது. இதை சேகரித்து தரம் வாரியாக பிரிக்கவும், அழிக்கவும் 20க்கும் மேற்பட்ட துாய்மைப்பணியாளர்கள் உள்ளனர்.இவர்கள் மழை, குளிர், வெயில் என பருவநிலையை பொருட்படுத்தாமல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இவர்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் அணிவதில்லை.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கழிவுகள், குப்பையில் பல வகை கிருமிகளும் உள்ளன. துாய்மைப்பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் இருப்பதால், இந்தக்கிருமிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரவும் அபாயம் உள்ளது.தற்போது தொடர் மழை பெய்து வருவதால் கிருமிகள் பரவல் அதிகரிக்கும். ஆனால் போதியளவு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.இந்தப்பிரச்சனைக்கு தீர்வாக தேவையான பாதுகாப்பு உபகரணங்களை அவர்களுக்கு வழங்க வேண்டும். அதை அவர்கள் பொது இடங்களில் அணிந்து துாய்மைப்பணியில் ஈடுபடுவதை நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.