சென்னை, நவ. 29-அதிக நீரை வெளியேற்றும் வகையில், முட்டுக்காடு முகத்துவாரத்தின் அகலம் 150 அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய், முட்டுக்காடு அருகே கடலில் கலக்கிறது. வேளச்சேரி, சோழிங்கநல்லுார், ஒக்கியம் துரைப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர், பக்கிங்ஹாம் கால்வாயில் பயணிக்கிறது. இரண்டு நாட்களாக மழை தீவிரம் அடைந்துள்ளதால், பக்கிங்ஹாம் கால்வாயில் நீரோட்டம் அதிகரித்துள்ளது.
கடலிலும் அலையின் வேகம், அதிகமாக இருப்பதால், நீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, முகத்துவாரத்தின் அகலத்தை 150 அடியாக நீர்வளத்துறையினர் அதிகரித்துள்ளனர். அங்கு ஐந்து பொக்லைன் வாகனங்கள் வாயிலாக அடைப்பை நீக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், எவ்வித சிக்கலும் இன்றி பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வெள்ள நீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது.