மதுராந்தகம் : கன மழை காரணமாக, மதுராந்தகம் ஏரிக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதை அடுத்து, பாதுகாப்பு காரணம் கருதி, ஏரியில் இருந்து நேற்று, 29,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
இதனால், ஏரியை ஒட்டியுள்ள 18 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில், பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி, 2,411 ஏக்கர் பரப்பளவு உடையது. இது, 23.3 அடி ஆழமும், 694 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டது. இந்த ஏரி முழுமையாக நிரம்பினால், சுற்றி உள்ள, 2,834 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து, இம்மாதம் 8ம் தேதி காலை, மதுராந்தகம் ஏரி முழுமையாக நிரம்பியது.
ஏரிக்கு வரும் உபரி நீர் கலங்கல் வழியாக வெளியேறியது. இந்நிலையில், கடந்த வாரம் ஏரிக்கான நீர்வரத்து 12,000 கன அடியாக உயர்ந்ததால், 110 ஷட்டர் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்த கன மழையால் ஏரிக்கான நீர்வரத்து நேற்று முன்தினம் இரவு 27,500 கனஅடியாக அதிகரித்தது. இதையடுத்து, ஏரியில் உள்ள அவசரகால ஷட்டர் வழியாக 2,000 கனஅடி தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது.
தற்போது ஏரியில் இருந்து, 29,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அதிக அளவிலான உபரிநீர் வெளியேற்றத்தால், கிளியாற்று கரையோர கிராமங்களக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மதுராந்தகத்தை சுற்றி உள்ள கத்திரிச்சேரி, விழுதமங்கலம், வளர்பிறை, முள்ளி, முன்னுத்திக்குப்பம், நீலமங்கலம் முருக்கஞ்சேரி, குன்னத்தூர், கருங்குழி, இருசமநல்லுார், பூதுார், ஈசூர், கே.கே.பூதுார், வீராணகுண்ம், சகாயநகர், ஒழுகமங்கலம், கீழாமூர், பெரும்பாக்கம் உள்ளிட்ட 18 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி, வருவாய் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.