வீட்டில் 27 சவரன், ரூ.90,000 திருட்டு
புழல்: புழல் அடுத்த புத்தகரம், வானவா நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 47. இவர், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள, அரசு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த வாரம் சென்னை வந்தவர், 21ம் தேதி, தன் குடும்பத்தினரையும், கேரளாவிற்கு அழைத்து சென்றார். இதையடுத்து, நேற்று காலை அவர் மட்டும் சென்னைக்கு வந்தார்.
அப்போது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 27 சவரன் நகை, 90 ஆயிரம் ரூபாய், அரை கிலோ வெள்ளியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.
வெடிகுண்டு வீசியவர் மீது 'குண்டாஸ்'
தண்டையார்பேட்டை: திரு.வி.க., நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 28. இவர் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
கடந்த அக்டோபரில், தண்டையார்பேட்டை, திலகர் நகரில் நடந்த தகராறில், ஒரு வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், மணிகண்டன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருந்ததால், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, மணிகண்டனை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.