இதையடுத்து, 60 கிராமங்களில் வசிக்கும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் வாயிலாக சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 11.7 டி.எம்.சி., ஆகும்.இந்த ஐந்து ஏரிகளும் ஏற்கனவே நிரம்பிவிட்டன. அவற்றில் இருந்து உபரி நீர் திறக்கும் பணியை நீர்வளத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
வெள்ள அபாயம்இதை கருத்தில் வைத்து, 5 ஏரிகளிலும் நீர் இருப்பு ஒன்பது டி.எம்.சி.,க்கு கீழ் குறைக்கப்பட்டுள்ளது.இதனிடையே, நீர்வரத்து அதிகரிப்பை தொடர்ந்து, உபரி நீர் திறப்பும் அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, ஐந்து ஏரிகளில் இருந்தும் வினாடிக்கு 18 ஆயிரத்து 535 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக, பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆறு வழியாக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது
.இதனால், ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3,135 கனஅடி நீர் அடையாற்றிலும், புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 1,695 கன அடி நீர், உபரி நீர் கால்வாயிலும், சோழவரத்தில் இருந்து வினாடிக்கு 1,415 கனஅடி உபரிநீரும் திறக்கப்பட்டுள்ளது.பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை அடுத்த பிச்சாட்டூர் ஏரிகளில் இருந்து கூடுதலாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் கொசஸ்தலை மற்றும் ஆரணியாற்றில், வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், 60க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
- நமது நிருபர் -