சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 10,899 பேர் புதிய வாக்காளர்களாக சேர விண்ணப்பம் செய்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி 2022 ஜன., முதல் நாளை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்கள் புதிய வாக்காளர்களாக சேர்க்க நவ., மாதத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சிவகங்கை ஆர்.ஆர்.ஆர்.கே., நடுநிலைப்பள்ளியில் நடந்த முகாமில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு பின் அவர் தெரிவித்ததாவது:
புதிய வாக்காளர்களாக சேர மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளையும் சேர்த்து நவ., 27 வரை 10,899 பேர் விண்ணப்பித்துள்ளனர். 4334 பெயர் நீக்கம் செய்யவும், 1574 விண்ணப்பங்கள் பெயர் திருத்தம், 1407 முகவரி மாற்றத்திற்கும் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு புதிய வாக்காளர் சேர்க்கை, திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் செய்து ஜன., 22 ல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அனைத்து சிறப்பு முகாம்களிலும் தகுதியுள்ள வாக்காளர்கள் பெயர் சேர்த்திட வேண்டும், என்றார். அவருடன் தாசில்தார் தர்மலிங்கம், துணை தாசில்தார் சசிக்குமார் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.