எரியோடு : எரியோடு அருகே கோயிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
எரியோடு பேரூராட்சி மறவபட்டியில் ரயில்வே கேட் அருகில் குளத்திற்குள் முனியப்பசுவாமி கோயில் உள்ளது. இங்கு சிமென்ட் தளம் அமைத்து உண்டியல் நிறுவப்பட்டிருந்தது. நேற்று காலை கோயில் பகுதிக்கு பொதுமக்கள் சென்றபோது உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது.கொள்ளையர்கள் சில்லரை மதிப்பு பணத்தை அங்கே விட்டுவிட்டு அதிக மதிப்புடைய ரூபாய்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
கிராமத்தினர் கூறுகையில், ''இங்கு திருவிழா நேரத்தில் மட்டுமே கோயில் உண்டியலை திறந்து பயன்படுத்துவோம். கடைசியாக திறந்து 4 ஆண்டுகளுக்கு மேலானதால் ரூ.1 லட்சம் அளவில் பணம் இருந்திருக்கலாம். இரவு ரயில்கள் இப்பகுதியை கடக்கும் நேரத்தில் கருங்கற்களால் உண்டியலை உடைத்துள்ளனர். அருகில் குடியிருப்புகள் இருந்தும் யாருக்கும் சத்தம் கேட்கவில்லை' என்றனர். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.