சின்னாளபட்டி : கோவிட் தடுப்புப் பணி ஊக்கத்தொகையில் ஒப்பந்த, தற்காலிக பணியாளர்களை புறக்கணித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழக அரசு கோவிட் தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு, ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்திருந்தது. நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக, சளி மாதிரி சேகரிப்பு, பரிசோதனை, சிகிச்சை உதவியாளர், கவுன்சிலிங் வழங்குபவர் உள்பட பல நிலைகளில், ஒப்பந்த, தற்காலிக பணியாளர்கள் ஈடுபட்டனர்.ஊக்கத்தொகை பட்டியலில், நிரந்தர பணியாளர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை, தற்போது ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தொகுப்பூதிய மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் இப்பட்டியலில் சேர்க்கப்படாததால் ஏமாற்றத்தில் உள்ளனர்.தற்காலிக பணியாளர்கள் சிலர் கூறுகையில், "தொற்று பாதித்து, உயிர்போகும் நிலையில் மீண்ட ஊழியர்களும் பலன் பெறவில்லை. ஒப்பந்த, தொகுப்பூதிய பணியாளர் மட்டுமின்றி, கவுன்சிலிங் பணியில் ஈடுபட்ட காசநோய் தடுப்புத் திட்ட பணியாளர்கள், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்களும் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்" என்றனர்.