திருப்பூர்: மருத்துவ கல்லுாரி கட்டுமான பணி நிறைவு பெற்றதையடுத்து, இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
திறப்பு விழா தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.மத்திய அரசு நிதி, 193 கோடி, மாநில அரசு நிதி, 141 கோடி என, 334 கோடி மதிப்பில், தாராபுரம் ரோட்டில், 11.28 ஏக்கரில் மருத்துவ கல்லுாரி கட்டுமான பணி கடந்தாண்டு செப்டம்பரில் துவங்கியது. கொரோனா இரண்டாவது அலை ஊரடங்கு அறிவிப்பின் போது, கட்டுமான பணி சற்று மந்தமாகியது.ஜூனில், பணிகள் மீண்டும் வேகமெடுத்தது. குறிப்பாக, மத்திய மருத்துவ கவுன்சில், மாநில மருத்துவப்பணிகள் துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு நடத்தியதால் இரவு, பகலாக பணி நடந்தது. தற்போது, மருத்துவ கல்லுாரி வகுப்பறை, ஆய்வகம், கூட்டஅரங்கம், வீடியோ கான்பிரன்ஸ் ஹால், முகப்பு கட்டடம், துறை சார் உயரதிகாரிகளுக்கான அறை உள்ளிட்ட பணி நிறைவு பெற்றுள்ளது.90 சதவீதம் நிறைவுமருத்துவ கல்லுாரியின் ஆறு தளங்களுக்கான லிப்ட், மின் இணைப்பு, கழிப்பிடம், டைல்ஸ், கிரானைட் கல் நிறுவுதல், குடிநீர் குழாய் பொருத்துவது உள்ளிட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. 90 சதவீத கட்டுமான பணி முடிந்துள்ளதால், கல்லுாரி முகப்பில், தமிழக அரசு முத்திரையுடன் கூடிய, தமிழ் மற்றும் ஆங்கிலத்திலான பெயர் பலகை நேற்று பொருத்தப்பட்டது.மருத்துவமனைக்கான டீன், துறை சார் பேராசிரியர், மருத்துவ மாணவர்களுக்கான விடுதி, கூடுதல் கட்டங்கள் கட்டும் பணி நிறைவை எட்டியுள்ளது.
தரைத்தளம், 'பார்க்கிங்', சுற்றுச்சுவர், தளங்களின் முகப்பில் கண்ணாடி பொருத்தும் பணி சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. சுற்றிலும் தார் மற்றும் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது.'அட்மிஷன்' எப்போது?'நீட்' தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திருப்பூர் மருத்துவ கல்லுாரியில், 150 இடங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது.மத்திய சுகாதாரத்துறையின் அனுமதி பெற்று, திறப்பு விழா நடக்கும் தேதி அறிவிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.