திருப்பூர்: கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்துவிட்டதால், மக்களிடையே, விழிப்புணர்வும் குறைந்துபோயுள்ளது. பொதுமக்கள், சரியான நோய் தடுப்பு வழிமுறையை பின்பற்றுவதில்லை.முக கவசம் அணிவது; சமூக இடைவெளியை பின்பற்றுவது; கைகளை அடிக்கடி கழுவுவது போன்ற, நோய் தடுப்பு நடவடிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. மக்கள் கூடும் அரசு அலுவலகங்களில், 'சானிடைசர்' வைக்கும் பழக்கமும் மறதியாகிவிட்டது.'ஒமைக்ரான்' என்ற புதிய வகை வைரசால், தொற்று பரவல் அதிகரிக்குமென, சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மாவட்ட கலெக்டர்கள், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சுகாதாரத்துறை செயலர் அறிவுறுத்தியுள்ளார்.இருப்பினும், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் நேற்று, யாரும் சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. அனைத்து துறை அதிகாரிகளும், சமூக இடைவெளி இல்லாமல் அமர்ந்திருந்தனர்.
பொதுமக்களும், கூட்டம் கூட்டமாக சென்று, மனு கொடுத்தனர்.மனுக்களை பதிவு செய்யும் இடத்திலும், காற்றுபுகாதபடி, நெருக்கமாக நின்று, மனுக்களை பதிவு செய்து கொண்டனர். இதேபோல், பல்வேறு ஆய்வு கூட்டங்களிலும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற பொது உத்தரவு பின்பற்றப்படுவதில்லை.சுகாதாரத்துறையினர் கூறுகையில்,'ஊரடங்கு முழுமையாக திரும்பபெறவில்லை. மக்கள் வசதிக்காக தளர்வு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலை பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருவதால், 'ஒமைக்ரான்' தொற்று பரவலுக்கு இடமளிக்காமல், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். விடுபட்டவர்கள், கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்,' என்றனர்.