திருப்பூர்: ' தமிழக சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,' என, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த 25ம் தேதி, தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறிப்பட்டுள்ளது. இதற்கு ஒமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனாவை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மைக்ரான் தொற்று பரவல் தடுப்பில் கவனமாக இருக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.கொரோனா இரண்டாவது அலையின் போது வெளியிடப்பட்டது போன்ற பிரத்யேக வழிகாட்டு நெறிமுறை விரைவில் வெளியாக உள்ளது.அதன் பின், மாவட்ட அளவில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கை குறித்து, முடிவெடுக்கப்படும். அதன் பின், தாலுகா, வட்டார அளவில் ஒமைக்ரான், தடுக்கும் வழிமுறை, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை பணிகள் குறித்து உத்தரவிடப்பட உள்ளது.சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில்,'வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் கோவை வருவோர், திருப்பூர் மாவட்ட முகவரி கொண்டவர்களை கண்காணிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.இதுவரை யாரும் அவ்வாறு வரவில்லை. வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவர். மாநில எல்லைகளில் குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மக்கள் பயமின்றி, பாதுகாப்புடன் இருக்க தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,' என்றனர்.