பல்லடம்: ''முத்ரா கடன் பெற்றவர்களுக்கு, அரசு அறிவித்த தள்ளுபடி மானியம் கிடைக்கவில்லை'' என, கைத்தறி நெசவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறிகள் உள்ளன. கைத்தறி நெசவாளர்கள், வங்கிக் கடன் பெற்று, தொழிலை விரிவுபடுத்துகின்றனர். அவ்வாறு, 'முத்ரா' வங்கி கடன் பெறும் கைத்தறியாளருக்கு, தள்ளுபடி மானியம் உண்டு என அரசு அறிவித்திருந்தது. ஆனால், கடன் வாங்கிய பலருக்கு மானியம் கிடைக்கவில்லை என கைத்தறியாளர்கள் புலம்பி வருகின்றனர்.பாரதிய மஸ்தூர் சங்க மண்டல செயலாளர் நடராஜன் கூறுகையில், '''முத்ரா' வங்கி கடன் பெறும் கைத்தறியாளருக்கு, 25 ஆயிரம் ரூபாய்க்கு 5 ஆயிரம் ரூபாயும், 50 ஆயிரம் ரூபாய் பெறுபவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி மானியமாக வழங்கப்படுகிறது. ஆனால், வங்கி கடன் பெற்ற பலருக்கு தள்ளுபடி மானியம் கிடைக்கவில்லை.மானியத்தை நம்பியே நெசவாளர்கள் பலர் கடன் பெறுகின்றனர். மானியம் நிலுவையில் இருப்பதால், கிடைக்குமா, கிடைக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே தொழில் நலிவடைந்துள்ள சூழலில், மானியம் இல்லையெனில், நெசவாளர்கள் பலர் பாதிக்கப்படுவர். எனவே, ஏற்கனவே தவித்தபடி தள்ளுபடி மானியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.