-நமது நிருபர்-
கவுண்டம்பாளையத்தில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டுள்ள 14 மாடிகள் கொண்ட பன்னடுக்கு மாடிக்குடியிருப்பில், 1074 வீடுகளை ஒதுக்கீடு செய்வதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க், டி.எப்.ஓ.,குடியிருப்பு, காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன.இடிக்கப்பட்ட வீடுகளுக்குப் பதிலாக, கவுண்டம்பாளையத்தில் வாரியத்துக்குச் சொந்தமான 12.59 ஏக்கர் பரப்பளவில், 14 மாடிகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகளில் மொத்தம் 1848 வீடுகள், ரூ.520 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.ஒதுக்கீடு ஆணை வெளியீடுஇந்த வீடுகளில் குடியேற விரும்பும் அரசு அலுவலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன. மொத்தமுள்ள 1848 வீடுகளுக்கு, 1074 பேரிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வந்துள்ளன. விண்ணப்பங்களைப் பரிசீலித்த கோவை கலெக்டர் சமீரன், விண்ணப்பித்த அனைவருக்கும் வகைவாரியாக வீடுகள் ஒதுக்கீடு செய்து, கடந்த 19ம் தேதியன்று ஆணை வெளியிட்டுள்ளார்.இனி இவர்களின் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, ஊதிய விகிதாச்சாரம் அடிப்படையில், தனித்தனியாக வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த குடியிருப்பில், 56 'ஏ' டைப் வீடுகள் இருக்கும் நிலையில், ஏழு வீடுகளுக்கு மட்டுமே விண்ணப்பம் வந்துள்ளது.அதேபோன்று 'பி' டைப்பில் 294 வீடுகளுக்கு 37, 'சி' டைப்பில் 1148 வீடுகளுக்கு 731, 'டி'டைப்பில் 350 வீடுகளுக்கு 297 என்ற எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்துள்ளன.மொத்தத்தில் இன்னும் 774 வீடுகளுக்கு விண்ணப்பமே வரவில்லை.பராமரிப்புக்கு தனி அலுவலகம்மொத்தம் 14 மாடிகள் கொண்ட பன்னடுக்குமாடி என்பதாலும், லிப்ட் இயங்குமா, தண்ணீர் பிரச்னை இருக்குமா என்ற அச்சத்திலும், இங்கு குடியேறுவதற்குத் தயங்குவதாக அரசு அலுவலர் அமைப்பின் நிர்வாகிகள் கூறுகின்றனர்.இந்த குடியிருப்பைப் பராமரிப்பதற்கு மட்டும் சிறப்பு கோட்டத்தில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு, செயற்பொறியாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு செயற்பொறியாளர் பெரியசாமியிடம் கேட்டதற்கு, ''அந்த குடியிருப்பில், வீடுகள் அனைத்தும் குடியேறுவதற்குத் தயார் நிலையில் உள்ளன. குடியிருப்பைப் பராமரிப்பதற்கு வளாகத்திலேயே விரைவில் அலுவலகம் திறக்கப்படும்,'' என்றார்.