கோவை: கோவை மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட, 587 பேர் விருப்ப மனு கொடுத்திருக்கின்றனர்.கோவை மாவட்ட அ.தி.மு.க., தலைமை அலுவலகமான, இதய தெய்வம் மாளிகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம், 26ம் தேதி முதல் விருப்ப மனு பெறப்பட்டது; 28 வரை மனு பெறப்படும் என, முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.அஷ்டமி, நவமி என்பதால், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மனு கொடுக்க கட்சியினர் விரும்ப மாட்டார்கள்; திங்கட்கிழமை சுப முகூர்த்த நாள் என்பதால், ஒருநாள் நீட்டிக்க, நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதையேற்று, விருப்ப மனு நேற்று பெறப்பட்டது.கட்சியினர் ஆதரவாளர்களை திரட்டிக் கொண்டு, சாரை சாரையாக அலுவலகம் வந்தனர். பணம் செலுத்திய ரசீதை இணைத்து, விருப்ப மனு கொடுத்தனர். எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ச்சுணன், ஜெயராமன், அருண்குமார், செல்வராஜ், கந்தசாமி, அமுல் கந்தசாமி உள்ளிட்டோர் அவற்றை பெற்றனர்.கோவை மாநகராட்சி எல்லைக்குள், தெற்கு, வடக்கு, சிங்காநல்லுார், கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகள் வருகின்றன.தெற்கு, வடக்கு, சிங்காநல்லுார் தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளுக்கு, 337 பேரும், கவுண்டம்பாளையம் தொகுதியில் உள்ள வார்டுகளுக்கு, 89 பேரும், கிணத்துக்கடவு தொகுதிகளில் உள்ள வார்டுகளுக்கு, 161 பேரும் மனு கொடுத்திருக்கின்றனர்.மொத்தமுள்ள, 100 வார்டுகளுக்கு, 587 பேர் மனுக்கள் கொடுத்துள்ளனர். இதை, வார்டு வாரியாக பிரிக்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.