மதுரை : தமிழக அரசு 2021- - 2022 ஆண்டில் ஊரக பகுதியில் வசிக்கும் ஏழை விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற பெண்களுக்கு நுாறு சதவீதம் மானியத்தில் ஒருவருக்கு தலா ஐந்து வெள்ளாடுகள்/செம்மறியாடுகள் வழங்கவுள்ளது.
இத்திட்டத்தில் பயன் பெற பயனாளிகள் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும். சொந்த நிலமில்லாத கூலியாக இருக்க வேண்டும். பயனாளி ரேஷன்கார்டில் இடம்பெற்றவர்கள் பெயரிலும் நிலம் இருக்க வேண்டும். 60வயதிற்குட்பட்ட பஞ்சாயத்தில் நிரந்தரமாக குடியிருப்பவராக இருப்பதுடன், ஒன்றிய, மாநில அரசு அல்லது அவை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிவராக இருக்க கூடாது. விலையில்லா கறவைபசு, செம்மறியாடு, வெள்ளாடு வழங்கும் திட்டத்தில் பயன்பெற்றவராக இருத்தல் கூடாது.கலெக்டர் அனீஷ்சேகர் கூறியதாவது:
மதுரை மாவட்டத்தில் ஒரு ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 1300 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். தகுதியானவர்கள் கால்நடை நிலையங்களில் வழங்கப்படும் விண்ணப்பங்களை பெற்று வி.ஏ.ஓ., கையெழுத்து பெற்று தேவையான ஆவணங்களை இணைத்து அந்த கால்நடை நிலையத்தில் டிச., 1 முதல் 10 தேதிக்குள் வழங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கோட்ட உதவி இயக்குனரை 94450 01174, திருமங்கலம் கோட்ட உதவி இயக்குனரை 94450 01175ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.