திண்டுக்கல் : கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன், மேற்கு ரதவீதி சிவலி்ங்கேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்குகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது.
சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதே போல் ரயிலடி சித்தி விநாயகர், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, கூட்டுறவு நகர் செல்வ கணபதி, நேருஜி நகர் நவசக்தி விநாயகர் கோயிலில் சோமவார சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளானோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. ஓம்கார விநாயகர், நந்தி, சோமலிங்க சுவாமிக்கு பல்வேறு திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு ஆராதனைகளுக்குப்பின், 108 சங்குகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் வேதி தீர்த்தம் நிரப்பப்பட்டு, மலர் அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. மூலவர், நந்திக்கு சங்காபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.