கடலுார்-கடலுாரில் நேற்று ஒரே நாளில் 17.3 செ.மீ., பெய்த கன மழையால், குடியிருப்புகள் தண்ணீர் சூழ்ந்து, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.வடகிழக்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து கடலுார் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 18ம் தேதி கடலுாரில் ஒரே நாளில் 15 செ.மீட்டர் மழை பெய்து, நகரம் வெள்ளக்காடாக மாறியது. தற்போது 3 நாட்களாக மழை தொடர்ந்து பெய்கிறது. நேற்று காலை வரை கடலுாரில் அதிகபட்சமாக 17.3 செ.மீட்டர் மழை வெளுத்து வாங்கியது.கலெக்டர் அலுவலகத்தில் 17, பரங்கிப்பேட்டை 10.5, எஸ்.ஆர்.சி.,குடிதாங்கி மற்றும் வானமாதேவியில் 10 செ.மீட்டர் மழை பதிவாகியது. மாவட்டம் முழுதும் பரவலமாக பெய்த மழையால் வெள்ளக்காடாக மாறியது. வயல்வெளிகள் மீண்டும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கடலுாரில் அதிகபட்ச மழையால் பாரதி சாலை, நேதாஜி சாலை, செம்மண்டலம் சாலை, கடலுார் சில்வர் பீச் ரோடு, வன்னியர் பாளையம், வண்ணாரப்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்தது.மஞ்சக்குப்பம், செம்மண்டலம், புதுப்பாளையம், கே.கே.நகர், பாரதியார் நகர், கடலுார் முதுநகர், பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், சாவடி உட்பட பல பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட நகர் பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பாதித்த மக்கள், தீயணைப்பு வீரர்கள் மூலம் கரையேற்றப்பட்டனர்.கடலுாரில் நேற்று பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கியது.குறிஞ்சிப்பாடிகடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள தம்பிபேட்டை காலனி பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கனமழையால் ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, இந்த பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் குறிஞ்சிப்பாடி தாசில்தார் சையத் அபுதாகிர், கண்காணிப்பு அலுவலர் உதயகுமார், பி.டி.ஓ., சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர்.குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான மீட்புக் குழுவினரும், சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையிலான காவல்துறை மீட்பு குழுவினரும் கிராமத்திற்கு சென்று படகு மூலம் முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் உட்பட 80க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டு அரசு பள்ளியில் தங்க வைத்துள்ளனர்.புதுச்சேரிபுதுச்சேரியில் கடந்த மாதம் 26ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், வங்கக் கடலில் அடிக்கடி உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.
நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 வரை புதுச்சேரியில் 15 செ.மீ., மழை பெய்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் 28 செ.மீ., மழை கொட்டி தீர்த்துள்ளது.இந்திரா சிக்னல், ராஜிவ் சிக்னல், 100 அடி ரோடு, சிவாஜி சிலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 2,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்தனர்.