புதுச்சேரி-இறந்த கன்று குட்டிகளின் உடல்களை, சட்டசபை முன்பு கிடத்தி போராட்டம் நடத்திய பால் வியாபாரியால் பரபரப்பு ஏற்பட்டது.சாரம் கவிக்குயில் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 31; கறவை மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவரது மாடுகள் மற்றும் கன்று குட்டிகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், 3 கன்று குட்டிகள் நேற்று திடீரென உயிரிழந்தன.அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார், 3 கன்று குட்டிகளின் உடல்களை நேற்று சட்டசபை நுழைவாயில் முன்பு சாலையில் கிடத்தி, தர்ணாவில் ஈடுபட்டார்.பெரியக்கடை இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் ராஜ்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதையடுத்து தலைமை தபால் நிலையம் அருகே போராட்டத்தை தொடர்ந்தார். புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள், கன்று குட்டிகளை அடக்கம் செய்ய கொண்டு சென்றனர்.ராஜ்குமார் கூறுகையில்; மழைக்காலத்திற்கு முன்பு மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி போட வேண்டும். ஆனால் காலம் கடந்து தடுப்பூசி போடப்பட்டதால், கன்றுகுட்டிகள் இறந்து விட்டன. ஏற்கனவே 4 கன்றுகள் உயிரிழந்து விட்டன. அவற்றை அடக்கம் செய்து விட்டேன். தற்போது மேலும் 3 கன்று குட்டிகள் இறந்துள்ளன. அவற்றை அடக்கம் செய்ய என்னிடம் போதிய பணம் இல்லை. அதனால் இறந்த கன்று குட்டிகளை அரசிடம் ஒப்படைக்க கொண்டு வந்தேன் என்றார்.