விழுப்புரம்-விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி பெரியகாலனியைச் சேர்ந்தவர் சிவராமன், 37; ஆவின் பால் விற்பனையாளர். இவர், நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் திடீரென, தீக்குளிக்கப் போவதாக தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடன், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு விசாரித்தனர்.அதில், விக்கிரவாண்டியைச் சேர்ந்த தனது உறவினர் மனோகரன் மகன் தினேஷ்குமார் மற்றும் மோகன் மகள் திவ்யா ஆகியோருக்கு விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தோம்.அங்கு, நாங்கள் கேட்ட பாடப்பிரிவு வழங்காமல், மாற்று பாடப்பிரிவு வழங்குகின்றனர்.இதனால், தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.இதையடுத்து, போலீசார் அறிவுறுத்தலின் பேரில், கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டுச் சென்றார்.இச்சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.