விழுப்புரம்-தொடர் மழையால் அகரம் சித்தாமூர் பம்பை ஆற்று தரைப்பாலம் மூன்றாவது முறையாக மூழ்கியது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் கனமழை பெய்து வந்தது. இதனால், தென்பெண்ணை ஆறு, பம்பை ஆறு, மலட்டாற்றில் மூன்றாவது முறையாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால் அகரம் சித்தாமூர், பள்ளியந்துார், மல்லிகைப்பட்டு தரைப்பாலங்கள் தண்ணீரில் மூன்றாவது முறையாக மூழ்கின.இதனால், வாழப்பட்டு, கெடார், அகரம் சித்தாமூர், பள்ளியந்துார் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இக்கிராம மக்கள் 10 கி.மீ., சுற்றி கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்காக விழுப்புரம் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.அகரம் சித்தாமூர் தரைப் பாலத்தில் ஆபத்தை உணராமல் இரு சக்கர வாகனங்களில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சென்றனர். அவர்களை காணை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தரைப் பாலங்களில் போக்குவரத்திற்கு போலீசார் தடை விதித்து தடுப்புகள் அமைத்துள்ளனர்.