விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 14 ஆயிரத்து 735 ஏக்கர் நெற்பயிர், 4,000 ஏக்கர் உளுந்து பயிர்களும் சேதமாகியுள்ளதாக, வேளாண் துறை மூலம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி முதல் 22ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக கன மழை பெய்தது. இதனால், பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. நீர் நிலைகள் நிரம்பின.அது மட்டுமின்றி, கிராமங்களில் உள்ள சில தரைப் பாலங்களை மூழ்கடித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.வெள்ளத்தில் பயிரிட்டிருந்த மற்றும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்களும் மூழ்கின. மழை வெள்ள நீர் வடியாமல் நின்றதால், பயிர்கள் அழுகி சேதமானது. இதனால், பாதித்த விவசாயிகள் சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர்.இதையடுத்து, வேளாண்மைத் துறை அதிகாரிகள், மாவட்டத்தில் உள்ள வட்டார அலுவலர்கள் மூலம், கனமழையால் அந்தந்த பகுதிகளில் சேதமாகிய பயிர்களை கணக்கீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.
அதன் மூலம் நெற்பயிர்கள் 14 ஆயிரத்து 735 ஏக்கர் சேதமானது கண்டறியப்பட்டது. அது மட்டுமின்றி, உளுந்து 4,000 ஏக்கர் மற்றும் இதர பயிர்கள் 20 சதவீதம் சேதமாகியுள்ளதை அதிகாரிகள் கணக்கீடு செய்துள்ளனர்.மழையால் பாதித்த பயிர்களில் பெரும்பாலும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சாகுபடிகள் அதிகளவு பாதித்துள்ளது. சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில், சேதமாகிய பயிர்களுக்கு விரைவாக இழப்பீட்டு தொகையை அரசிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இது தொடர்பாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில் மழையால் சேதமாகிய சாகுபடி பயிர்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த பயிர்களும், வளர்ந்த நிலையில் இருந்த பயிர்கள் என தனித்தனியாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.அது மட்டுமின்றி, வளர்ந்த நிலையில் இருந்த பயிர்களுக்கு இழப்பீடு தொகை மற்றும் 6,038 ரூபாய் மதிப்பில் 45 கிலோ விதை நெல், 25 கிலோ நுண்ணுாட்ட சத்து, 60 கிலோ யூரியா, 25 கிலோ டி - அமோனியம் பாஸ்பேட் இடுபொருட்களாக வழங்கப்பட உள்ளது.இதற்கான அரசாணைகள் விரைவில் வந்தவுடன், இந்த இடுபொருட்கள் வழங்கப்படும்.
சேதமாகிய பயிர்கள் கணக்கீடு மற்றும் அதற்கான இழப்பீட்டு தொகை தொடர்பாக நாங்கள் எங்கள் துறை மூலம் சென்னை, வேளாண் துறை இயக்குனருக்கு கோப்புகள் அனுப்பியுள்ளோம்.சென்னை, வருவாய்த் துறை ஆணையருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் கோப்புகளை அனுப்பியுள்ளார்.விரைவில், அங்கிருந்து உத்தரவு கிடைத்தவுடன், பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்' என தெரிவித்தனர்.