பெண்ணாடம்-பெண்ணாடம் அருகே தொடர் கனமழைக்கு முழு அளவை எட்டிய, ஓ.கீரனுார் பொதுப்பணித்துறை பாசன ஏரியை ஏ.எஸ்.பி., ஆய்வு செய்தார்.தொடர் கனமழை காரணமாக, பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள துறையூர், கோனுார், அரியராவி, காரையூர், தாழநல்லுார், தீவளூர், ஓ.கீரனுார், பெ.பூவனுார், சத்தியவாடி, கார்மாங்குடி உள்ளிட்ட ஏரிகள் முழு அளவு நிரம்பின. பெண்ணாடம் அடுத்த ஓ.கீரனுாரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 193 ஏக்கர் பரப்பிலான பாசன ஏரியும் முழு கொள்ளளவை எட்டியது.கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின்போது, ஓ.கீரனுார் ஏரியின் தென்கரை பகுதியில் இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தற்போது பெய்து வரும் மழைக்கு கரைகளின் தன்மை, தண்ணீரின் அளவு குறித்து விருத்தாசலம் ஏ.எஸ்.பி., அங்கித் ஜெயின் நேற்று ஆய்வு செய்தார். பெண்ணாடம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ஏரிகளை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத்திடம் தெரிவித்தார். சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், தனிப்பிரிவு ஏட்டு சின்னதுரை உடனிருந்தனர்.