பெண்ணாடம்-திட்டக்குடி அருகே தொடர் கனமழை காரணமாக பாதித்த பகுதிகளை அமைச்சர் கணேசன் நேற்று ஆய்வு செய்தார்.
திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி - நாவலுார் செல்லும் சாலையில் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பகுதியை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார். ஓடையின் குறுக்கே புதிதாக மேம்பாலம் கட்டப்படும் என்றார். அதே பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பழுதான வகுப்பறை கட்டடம், சத்துணவு கூடத்தை பார்வையிட்டு, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக கட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என அதிகாரிகளிடம் தெரிவித்தார். நாவலுாரில் மழைநீரால் பாதித்த குடியிருப்புகளை பார்வையிட்டு, பாதித்தவர்களுக்கு அமைச்சர் நிவாரண உதவிகள் வழங்கினார்.தாசில்தார் தமிழ்ச்செல்வி, பி.டி.ஓ.,க்கள் தண்டபாணி, சண்முகசிகாமணி, மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், துணை சேர்மன் கலைச்செல்வி செல்வராஜ், ஊராட்சி தலைவர் செல்வாம்பாள் பழனிவேல், பள்ளி தலைமை ஆசிரியை ஜெயக்கொடி உடனிருந்தனர்.