உத்திரமேரூர்--மழையால் வாழ்வாதாரம் இழந்தாலும், சொந்த வீட்டை விட்டு நிவாரண முகாமிற்கு வரமறுத்த, 48 இருளர் குடும்பத்தினரின் வீடுகளுக்கே சென்று, உத்திரமேரூர் வருவாய் துறையினர், தனியார் நிறுவனம், உள்ளாட்சி பிரதிநிதிகள், மூன்று வேளையும் உணவு வழங்கி வருகின்றனர்.உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி ஊராட்சிக்கு உட்பட்ட காவாங்கரை தெருவில், இருளர் காலனியில், 28 குடும்பங்களைச் சேர்நத, 130 பேர் உள்ளனர். அதேபோல் சந்தைமேடு இருளர் காலனியில் 110 இருளர்கள் வசிக்கின்றனர். வடகிழக்கு பருவமழையால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் இருளர்களை வருவாய் துறையினர், நிவாரண முகாமில் வந்து தங்குமாறு அழைத்தனர்.ஆனால் அவர்கள், 'சொந்த வீட்டை விட்டு முகாமிற்கு வரமாட்டோம். உணவு மட்டும் வழங்கினால் போதும்' என தெரிவித்தனர்.இதையடுத்து உத்திரமேரூர் தாசில்தார் தாண்டவ மூர்த்தி ஏற்பாட்டின்பேரில், மேல்பாக்கத்தில் உள்ள நோபல்டெக் ஸ்டீல் கம்பெனி மற்றும் மானாம்பதி உள்ளாட்சி பிரதிநிதிகள், இருளர் குடியிருப்பு மக்களின் வீடுகளுக்கே நேரில் சென்று, மூன்று வேளையும் உணவு வழங்கி வருகின்றனர்.மழைக்கு தங்களது வீடுகள் ஒழுகாமல் இருக்க தார்ப்பாய், போர்வை, பாய் வழங்க வேண்டும் என, இருளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.