கிருஷ்ணகிரி: வேதாத்திரி மகரிஷி மனவளக்கலை மன்றம், உலக சமுதாய சேவா சங்கம், ஓசூர் மண்டலம் ஆகியவை இணைந்து, ஆன்மிக கல்வி மையங்களிலுள்ள அனைத்து நிலை ஆசிரியர்களுக்கான ஒரு நாள் மண்டல புத்தாக்க பயிற்சி கிருஷ்ணகிரியில் நடந்தது. மனவளக்கலை மன்ற தலைவர் சண்முகம் வரவேற்றார். மண்டல தலைவர் ரங்கசாமி, வாழ்த்தி பேசினார்.
உலக சமுதாய சேவா சங்க ஸ்மார்ட் இணை இயக்குனர் விவேகானந்தன் பேசியதாவது: மனவளக்கலை பயிற்சிதான் உலகுக்கு அமைதியை தரும். முதலில் மனதை அறிய வேண்டும். அதன் பலவீனத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். மனம் இழந்து விட்ட அதனது பெருமையை மீட்கின்ற முயற்சியும் வேண்டும். அதற்கு வழி வகுத்து உறுதுணையாக நிற்பதுதான் இந்த மனவளக்கலை பயிற்சி முறையாகிய எளிமை படுத்தப்பட்ட குண்டலினியோகம். மனதிற்கு தூய்மை ஊட்டுவது, மனதின் ஆற்றலையும் பெருக்குவதுதான் இந்த மனவளக்கலை பயிற்சி முறை. மனமானது, உயிர், உடல் இவற்றோடு எந்த அளவுக்கு ஒற்றுமையாக இயங்குகின்றதோ, அந்த அளவுக்குத்தான் மனிதனின் அமைதி நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் பேசினார். இதில், 150 ஆன்மிக கல்வி மையங்களின் ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.