சிங்கார சென்னையின் நுழைவாயிலில் நாற்றம் எடுக்கும் குப்பை கழிவுகள் | சென்னை செய்திகள் | Dinamalar
சிங்கார சென்னையின் நுழைவாயிலில் நாற்றம் எடுக்கும் குப்பை கழிவுகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 டிச
2021
03:31

தாம்பரம் : தலைநகரின் நுழைவாயிலில் உள்ள தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் தேங்கும் குப்பையால் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை பணிகளில், அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதே இதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலை, சென்னையுடன் புறநகர் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலையில் தாம்பரம், செங்கல்பட்டு மட்டுமின்றி, கோயம்பேடு மார்க்கமாகவும், தினசரி, லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இதில், தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு மார்க்கமாக செல்லும் அணுகுசாலையின் சாலையோரத்தில், தாம்பரம் மாநகராட்சியின் எல்லையில், குப்பை கொட்டப்படுவது,

பல ஆண்டுகளாக வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில், ஐந்து பேரூராட்சிகள், ஐந்து நகராட்சிகளை இணைத்து, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. அவ்வாறு, மாநகராட்சியுடன் இணைந்த பேரூராட்சிகளின் பிரதான, உட்புற சாலைகளிலும், இதேபோல குப்பை கொட்டப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இது குறித்து, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தாம்பரம் மாநகராட்சியுடன் இணைந்துள்ள நகராட்சிகளில், ஏற்கனவே திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் நடைமுறையில் இருந்ததால், அங்கு அத்திட்டம் சார்ந்த பணிகள், ஓரளவு நடந்து வந்தன.அதேநேரம், பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைக்கான நிதி ஐந்து ஆண்டுகளாக சரிவர ஒதுக்கப்படாததால், அங்கிருந்த அதிகாரிகள் அப்பணிகளில் திணறி வந்தனர்.

இதனால், மாநகராட்சியுடன் இணைந்துள்ள பேரூராட்சிகளில், வீடுகள் தோறும் குப்பை பெறுவது, அவற்றை தரம் பிரித்து உரம் தயாரிப்பது என, திடக்கழிவு மேலாண்மை திட்டம் சார்ந்த பணிகள், 50 சதவீதமே நடந்தன.இச்சூழலில், அவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளதாலும், பருவமழை காரணமாக தற்போது வரை, மண்டலங்கள் பிரிக்கும் பணிகள் துவங்கப்படாததாலும், மாநகராட்சியுடன் இணைந்துள்ள பேரூராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் சுத்தமாக முடங்கி உள்ளன

இதனால், மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகளில், கடுமையான சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இப்பிரச்னைகளுக்கு, மாநகராட்சி கமிஷனர் விரைவில், நிரந்தர தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X