புழல் : புழல் புறவழிச்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு பெட்டக லாரி மீது, இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், அதை ஓட்டிய சிறுவன், தாயின் கண் எதிரில் பலியானார்.
சென்னை, கே.கே., நகர், 16வது தெரு, 4வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமய்யன். அவரது மனைவி தேவி, 40; மகன் தனுஸ்வரன், 16. நேற்று காலை 8:45 மணிக்கு, தேவி, தனுஸ்வரன் இருவரும், இரு சக்கர வாகனத்தில் புழலுக்கு சென்று கொண்டிருந்தார். தாம்பரம் - -புழல் புறவழிச்சாலையில்,புத்தகரம், வெங்கடேஸ்வரா நகர் அருகே சரக்கு பெட்டக லாரி டயர் பஞ்சராகி நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது, சிறுவன் தனுஸ்வரன் ஓட்டி சென்ற இரு சக்கர வாகனம், எதிர்பாராமல் அந்த லாரி மீது மோதியது. தலைக்கவசம் அணியாத நிலையில், தலையில் பலத்த காயமடைந்த சிறுவன், ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். காயமடைந்த அவரது தாய் சிகிச்சை பெற்று வருகிறார். மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் குணசேகரன், 39 என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.