சின்னசேலம் : சின்னசேலம் ஏரியிலிருந்து வெளியேறும் நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.சின்னசேலம் நகரில் உள்ள 350 ஏக்கர் பரப்பளவிலான ஏரி மூலம் சுற்று வட்டார விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், நகரப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்து வருவதால் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது
.இதன் காரணமாக ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியதால், உபரி நீர் ஏரி கோடி வழியாக அருகே உள்ள நாட்டார்மங்கலம், பெத்தானுார் ஏரிகளுக்குச் செல்கிறது. ஏரியின் உபரி நீர் செல்லும் வாய்க்கால் கரைகளுக்கு அருகில் உள்ள நிலங்களில் தண்ணீர் ஊற்றெடுப்பதால் அப்பகுதியில் உள்ள கட்டடம் மற்றும் கடைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.மேலும், சாலையில் தண்ணீர் அதிகளவு செல்வதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, சாலையோரங்களில் தண்ணீர் செல்ல கால்வாய்களை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.