காருடன் அடித்துச் செல்லப்பட்டவர் மாயம்; கெடிலம் ஆற்றில் 'ட்ரோன்' மூலம் தேடும் பணி | செய்திகள் | Dinamalar
காருடன் அடித்துச் செல்லப்பட்டவர் மாயம்; கெடிலம் ஆற்றில் 'ட்ரோன்' மூலம் தேடும் பணி
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 டிச
2021
06:18

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலுார் அருகே, கெடிலம் ஆற்றில் காருடன் அடித்துச் சென்றவரை 'ட்ரோன்' கேமரா மூலம் தேடும் பணியில் போலீசார், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், 50; இவரது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த ஆனந்தன் நேற்று முன்தினம் இறந்தார். இந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க, பெங்களூருவில் இருந்து வந்த உறவினர்கள் இருவர் திருக்கோவிலுார் அடுத்த செட்டிதாங்கல் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தனர்.அவர்களை அழைத்து வருவதற்காக சங்கர் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த கிளியான், 47; ஆகியோர் டிஎன்.21 ஏயு 9828 எண்ணுள்ள இண்டிகா வாடகை காரில் செட்டிதாங்கல் நோக்கி நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் சென்றனர். காரை உரிமையாளர் முருகன், 45; ஓட்டினார்.அப்போது, மொகலார் - பழங்கூர் இடையே உள்ள கெடிலம் ஆற்றின் தரைப்பாலத்தில் ஆர்ப்பரித்து சென்ற தண்ணீரில் கார் சென்றது.

தண்ணீரின் சீற்றம் அதிகமாக இருந்ததால், கார் தண்ணீரில் அடித்துச் சென்றது.இதில், காரில் பயணித்த கிளியான், சங்கர் ஆகியோர் தப்பி, நீந்தி கரைக்கு வந்தனர். கார் உரிமையாளர் முருகன், காருடன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.திருக்கோவிலுார் டி.எஸ்.பி., கங்காதரன், இன்ஸ்பெக்டர் பாபு, சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு காருடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட முருகனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இரவு நேரம் மற்றும் தண்ணீரின் சீற்றம் அதிகமாக இருந்ததால் சிறிது நேரத்திற்குப் பிறகு தேடும் பணியை நிறுத்தினர்.தொடர்ந்து நேற்று காலை முதல் தேடும் பணியை துவங்கினர். தரைப்பாலத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவிற்கு தேடியும் முருகன் கிடைக்கவில்லை. ஆற்றின் நடுவே உள்ள புதர்களில், காருடன் முருகன் சிக்கியுள்ளாரா என 'ட்ரோன்' கேமரா மூலம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாலை 6:30 மணி வரை தேடியும் கிடைக்காததால் மீண்டும் இன்று தேடும் பணியில் ஈடுபட உள்ளனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X