மதுரை : மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம் பகுதியில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக்கூடாது. தெப்பக்குளத்தை மேலும் சுத்தப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை சின்ன அனுப்பானடி உதயகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:இக்கோயில் தெப்பக்குளம் டவுன்ஹால் ரோட்டில் உள்ளது. அதன் கலைநயத்தை மறைக்கும் வகையில் நான்கு புறமும் வணிக கட்டுமானங்கள் உள்ளன. நீர் வழித்தடம் சேதமடைந்துள்ளது. கழிவு நீர் கலக்கிறது. உயர்நீதிமன்றம் 2011 ல் தானாக முன்வந்து விசாரித்து உத்தரவிட்டதன்பேரில் தெப்பக்குளத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பின் மேல்நடவடிக்கை இல்லை. ஒரு பகுதியில் 2019 ல் சில கடைகள் அகற்றப்பட்டன. அதன்பின் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லை. தெப்பக்குளத்தின் கலைநயத்தை மறைக்கும் கட்டுமானங்களை அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும். குப்பை குவிப்பது, கழிவுநீர் கலப்பதை தடுக்க அறநிலையத்துறை, மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். ஏற்கனவே விசாரணையின்போது தெப்பக்குளத்தை கோயில் நிர்வாகம் சரியாக பராமரிக்கவில்லை என நீதிபதிகள் அதிருப்தி வெளியிட்டனர் .
நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு நேற்று விசாரித்தது.தெப்பக்குளத்தை துாய்மைப்படுத்தியதற்குரிய போட்டோ ஆதாரங்களை கோயில் தரப்பு சமர்ப்பித்தது. தெப்பக்குளத்தை சுற்றிலும் உள்ள கட்டடங்களிலிருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. அதை தடுத்து குழாயை மாநகராட்சி மூடிவைத்துள்ளது. 99 கடைகள் அகற்றப்பட்டுள்ளன. அகற்றும் உத்தரவை எதிர்த்து மற்ற 100 கடைக்காரர்கள் அரசிடம் சீராய்வு மனு தாக்கல் செய்து நிலுவையில் உள்ளது என தெரிவித்தது. நீதிபதிகள்: தெப்பக்குளம் பகுதியில் கோயில் இடத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக்கூடாது. கழிவுநீர் கலக்காமல் இருப்பதை உறுதி செய்து, தெப்பக்குளத்தை பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும். தெப்பக்குளத்தை மேலும் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜன.,7 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.