குஜிலியம்பாறை, : திண்டுக்கல் மாவட்டத்தின் வடகோடியில் உள்ளது குஜிலியம்பாறை ஒன்றியம். காடுகள், மலைகள் சூழ்ந்த வறட்சிப் பகுதி என்பதால், மானாவாரி விவசாயமே பெரும்பாலான நிலங்களில் மேற்கொள்ளப்படுகிறது. காரணம், போதிய மழை இன்மை மற்றும் நீர் ஆதாரமில்லாததால் விவசாயம் பொய்த்துப் போகிறது.
இருக்கிற ஒரு சில குளங்களிலும் கருவேல முட்கள் அடர்ந்து காட்சியளிக்கின்றன. அதேபோல் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகின்றன.பாளையம் பேரூராட்சி அய்யாகண்ணூர் அருகே வாழைக்குளம் உள்ளது. ஐம்பது ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்குளம், முழுக்க முழுக்க கருவேலம் மரங்களால் நிறைந்து காணப்படுகிறது. கிராமப்புறங்களில் விறகு பொறுக்கவோ, ஆடு, மாடு மேய்க்க செல்பவர்களோ கூட அச்சப்படும் அளவுக்கு முட்கள் நிறைந்துள்ளன.இந்த குளத்தில் இரவு, பகல் பாராமல் செம்மண் திருட்டு, செங்கல் சூளை கழிவுகளைக் கொட்டுவது
போன்ற நிகழ்வுகள் தொடர் கதையாகவே நடக்கின்றன. இதனால் ஒரு குளம், குளமாக இல்லை என கூறுகின்றனர் விவசாயிகள்.மக்கள் கூறுவதென்ன: தண்ணீர் தேக்குவது நல்லதுஎம்.சவுந்தரராஜன், இலுப்பபட்டி: சுற்றுப் பகுதியில் உள்ள மிகப் பெரியகுளம் வாழைக்குளம். இக்குளத்தில் உள்ள கருவேலம் மரப் புதர்களை அகற்ற வேண்டும். ஆடு மாடுகள் மேய்க்கச் செல்லக்கூட முடியவில்லை. பாசன தண்ணீர் வெளியேறும் பகுதி மற்றும் கூடுதல் தண்ணீர் வெளியேறும் கலுங்கும் சேதமடைந்துள்ளது. இந்தக் குளத்தை முறையாக பராமரிப்பு செய்து தண்ணீரைத் தேக்கினால் சுற்றுப்பகுதி பொதுமக்கள் பயன் பெறுவர். செம்மண் திருட்டால் பாதிப்புஏ. ராமச்சந்திரன், ஓய்வு பெற்ற ஆசிரியர், அய்யாக்கண்ணுர்:
பாளையம் பேரூராட்சியில் உள்ள இந்த வாழைக்குளம் நிறைந்தால் சுற்றுவட்டாரத்தில் குடிநீர் பிரச்னை மற்றும் விவசாய கிணறுகளில் தண்ணீர் பிரச்னை இருக்காது. தற்போது இக்குளம் கருவேலம் முட்களால்சூழப்பட்டுள்ளது. இந்தக் குளத்தில் செம்மண் திருட்டு தொடர்கதையாக உள்ளது. செங்கல் சூளைகளில் வீணாகும் கற்களை இங்க கொட்டிச் செல்கின்றனர். குளம்நிறையும் போது கூடுதல் தண்ணீர் வெளியேறும் கலுங்கு பகுதியும் உடைந்துள்ளது.50 ஏக்கர் பரப்புள்ள இந்தக் குளத்தில் கருவேல முட்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. கிராம ஊராட்சியாக இருந்தால் நூறு நாள் பணியாளரைக் கொண்டு சுத்தம் செய்து இருப்பர். பேரூராட்சி பகுதி அவ்வாறு செய்ய முடியவில்லை. பொதுமக்கள் சார்பில், கலெக்டரிடம் மனு கொடுத்து சுத்தம் செய்ய கூறுவோம்.