கொரோனா தொற்று குறைந்துள்ளதால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. துவக்க, நடுநிலை வகுப்பு மாணவர்கள் கடந்தாண்டு முழுதும் பள்ளிக்கு வராததால் ஏற்பட்ட கற்றல் குறைபாட்டை சரி செய்ய, 'இல்லம் தேடி கல்வி' திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.மதுரை, திண்டுக்கல் உட்பட 12 மாவட்டங்களில் இத்திட்டம் துவங்கியுள்ளனர்.
தன்னார்வலர் உதவியோடு மாணவர்களுக்கு அவர்களின் வீட்டருகே, பொது இடத்தை தேர்வு செய்து தினமும் 2 மணி நேரம் பாடம் நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, திண்டுக்கல்லில் தற்போது வரை 12 ஆயிரத்து 666 தன்னார்வலர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவர்களின் குடியிருப்பு பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் விபரங்களும் சேகரிக்கப்பட்டது.
முதற்கட்டமாக 100 பேருக்கு திறனறி தேர்வு, குழு கலந்தாய்வு நடத்தி அதில் 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பிளஸ் 2 படித்தவர்கள் 5 ம் வகுப்பு வரையும், அதற்கு மேல் படித்தவர்கள் 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் கற்பிக்க உள்ளனர். 'விண்ணப்பித்தோரில் தகுதியானவரை தேர்வு செய்து, மாணவர்களின் வீடு தேடிச் சென்று பாடம் எடுக்க ஏற்பாடு செய்யப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.