கடலாடி : கடந்த 5 நாட்களுக்கும்மேலாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆயிரத்து 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய் செடிகள் சேதமடைந்துஉள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கடலாடி அருகே எஸ்.தரைக்குடி, வாலம்பட்டி, கொண்டு நல்லான்பட்டி, சேதுராஜபுரம், உச்சிநத்தம், அன்னபூவன் நாயக்கன்பட்டி, கொக்கரசன் கோட்டை, செவல்பட்டி, முத்துராமலிங்கபுரம் செஞ்சடைநாதபுரம், கரிசல்குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் குண்டு மிளகாய், சிறுதானிய பயிரான கம்பு ஊடுபயிராக வெங்காயம், மல்லி சாகுபடி செய்துள்ளனர்.பெய்து வரும் மழையால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.வி.சேதுராஜபுரம் விவசாயிகள் முத்துவல்லாயுதம், சீனிவாசன் கூறியதாவது:ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் வீதம் செலவு செய்து மிளகாய் செடிகள் பயிரிட்டு உள்ளோம்.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கனமழையால் சேதம் ஏற்பட்டுள்ளது.சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் அழுகிய பயிரை கண்டு கண்ணீர் வடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மிளகாய் விளைச்சல் இல்லாததால் வரக்கூடிய ஆண்டில் மிளகாய் கடும் விலை உயர்வு ஏற்படும்.எனவே கடலாடி வருவாய் துறையினர் உரிய ஆய்வு செய்து சேதமடைந்த பயிர்களுக்கு நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும் என்றனர்.