புதுச்சேரி-''தனியார் ஆலைகளுக்கு கரும்பை அனுப்பும் போக்கை புதுச்சேரி அரசு மேற்கொண்டால், விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும்'' என எதிர்க்கட்சித் தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பில் பயிரிட்ட கரும்புகளை தனியார் ஆலைகளுக்கு தாரை வார்க்க சதி நடக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.சட்டசபை தேர்தலின்போது பா.ஜ.,- என்.ஆர்.காங்., ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை தொடங்கப்படும், புதுச்சேரி விவசாயிகளின் உற்பத்தி செய்யும் கரும்பை, இங்குள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையிலேயே அரவை செய்யப்படும் என கூறினர்.அதன்படி, கூட்டுறவு சர்க்கரை ஆலையை இந்த ஆண்டே திறந்து, புதுச்சேரி விவசாயிகளின் கரும்பை அரவை செய்ய வேண்டும். இதற்காக ஆலை பராமரிப்பு பணியையும் உடனே தொடங்க வேண்டும்.மத்தியிலும் பா.ஜ. ஆட்சியே உள்ளதால், புதுச்சேரியில் ஆளும் பா.ஜ., -என்.ஆர்.காங்., கூட்டணி அரசானது மத்திய அரசை அணுகி நிதியுதவி பெற்று, ஆலையை இயக்குவதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும்.இதை செய்யாமல், தனியார் ஆலைகளுக்கு கரும்பை அனுப்பும் போக்கை அரசும், வேளாண் துறையும் மேற்கொண்டால், விவசாயிகளை திரட்டி தி.மு.க., மிகப்பெரிய போராட்டங்களை நடத்தும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.