புதுச்சேரி-புதுச்சேரியில் மழை ஓய்ந்த பிறகும் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கத்திரிக்காய் ரூ. 160க்கும், அவரைக்காய் ரூ. 180க்கு விற்பனையானது.புதுச்சேரியில் கடந்த அக். 26ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியது முதல் காய்கறிகள் விலை உயர்ந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ. 100ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டது. பீன்ஸ், கேரட், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விலையும் உயர்ந்தது. மழை சற்று ஓய்ந்ததால், கடந்த வாரம் தக்காளி கிலோ ரூ. 40 என விலை குறைந்தது. தற்போது மீண்டும் மழை பெய்யத் துவங்கி உள்ளதால் காய்கறி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. காய்கறி மொத்த விற்பனை கடைகளில், ஒரு கிலோ வெங்காயம் ரூ. 40 முதல் ரூ. 45க்கும், தக்காளி கிலோ ரூ. 70க்கு விற்பனை செய்யப்பட்டது. பீன்ஸ் ரூ. 80, கேரட் ரூ. 80, பச்சை மிளகாய் ரூ. 80, சவுசவு கிலோ ரூ. 50, பீட்ரூட் ரூ. 70, கருணைக் கிழங்கு ரூ. 70, உருளைக்கிழங்கு ரூ. 45க்கு விற்கப்பட்டது. கத்திரிக்காய் கிலோ ரூ. 140 முதல் ரூ. 160 வரை விற்பனையானது. ஒட்டு மாங்காய் கிலோ ரூ. 120, அவரைக்காய் ரூ. 180க்கு விற்பனையானது.மழைக்கு முன் ரூ. 10க்கு விற்கப்பட்ட ஒரு கட்டு கீரை, நேற்று ரூ. 30க்கு விற்பனையானது. காய்கறிகள் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் கூறினர்.