புதுச்சேரி-புதுசாரம் பகுதியில் வாடகை வீடு எடுத்து, விபசார தொழில் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். கொல்கத்தா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இரு பெண்களை மீட்டனர்.புதுச்சேரி புதுசாரம், சுதந்திர பொன்விழா நகர், ஐ பிளாக் குடியிருப்பில் தங்கியுள்ள 2 பெண்கள், தினந்தோறும் ஆட்டோக்களில் வெளியாட்களுடன் சென்று, நள்ளிரவு மற்றும் அதிகாலையில் வீடு திரும்புவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோரிமேடு போலீசார் நேற்று முன்தினம் மாலை, அக்குடியிருப்பில் சந்தேகத்திற்குரிய பெண்கள் தங்கியுள்ள அறையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ரெட்டியார்பாளையம் தபால் நிலைய வீதியைச் சேர்ந்த அந்தோணி, 38; என்பவர், இரு பெண்களை சுதந்திர பொன்விழா நகர் குடியிருப்பில் வாடகை வீட்டில் தங்க வைத்து, விபசார தொழில் நடத்தி வருவது தெரிந்தது. மொபைல்போன் மூலம் அழைக்கும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வீடு, ஓட்டல் அறைக்கு, விபசாரத்திற்கு பெண்களை அனுப்பி வந்துள்ளார். அந்தோணியை கைது செய்த போலீசார், மூன்று மொபைல் போன், ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவை சேர்ந்த பெண் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு பெண் ஆகிய இருவரை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.