விருதுநகர் : விருதுநகர் சத்திரரெட்டியபட்டி கண்மாயில் போதிய மழை நீர் வந்தும் கண்மாயை ஆழப்படுத்தாததாலும், ஷட்டர் பழுதை சீரமைக்காததாலும் வரத்து நீர்தேங்காது வெளியேறி வருகிறது. இந்நிலை ஆண்டுக்கணக்கில் தொடர்ந்தும் பொதுப்பணித்துறை வேடிக்கை பார்க்கிறது.
விருதுநகர் சத்திரரெட்டியபட்டி கண்மாய் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கண்மாய்க்கு மதுரை சித்துார், நல்லமநாயக்கன்பட்டி பகுதியிலிருந்து நீர்வரத்து ஓடை வழியாக மழை நீர் சேகரமாகிறது. எல்லா கண்மாய்களிலும் உள்ள கருவேல மர பிரச்னை இக்கண்மாயிலும் உள்ளது. 2019ல் குடிமராமத்து பணிக்காக இக்கண்மாயை துார்வாரியதாக பொதுப்பணித்துறையினர் கூறுகின்றனர். ஆனால் அற்காகன எந்த அறிகுறியும் இல்லை. கருவேலமரங்கள்தான் காடு போல் வளர்ந்துள்ளன. பொதுப்பணித்துறை கூறுவது போல் மராமத்து செய்திருந்தால் இந்தளவிற்கு கருவேலங்கள் வளர வாயப்பே இல்லை.
ஆழப்படுத்திருப்தாலும் கண்மாயில் அதிக மழை நீர் தேங்கியிருக்கும்.அதுவும் இல்லை.இதை பார்க்கும் போது பெயரளவிலே மராமத்து செய்திருப்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. வெறுமனே கரையை மட்டும் பலப்படுத்தி உள்ளனர். தற்போது கண்மாய் வெளிப்பகுதிகளில் குப்பை கொட்டி உள்ளதால் அவற்றுடன் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாவதுடன் சுகாதார க்கேடும் ஏற்படுகிறது. கண்மாய் ஷட்டர் பழுது என்பது ஆண்டுக்கணக்கில் தொடர்கிறது.இதை சீராக்காததால் தேங்கும் மழை நீரும் வெளியேறி விடுகிறது.
இதனால் எவ்வளவு மழை பெய்தும் இங்கு தண்ணீர் தேங்குவதில்லை. இங்கு முன்பு விவசாயம் அதிகளவில் நடந்து வந்த நிலையில் கண்மாயில் நீர் இருப்பு குறையவும், கருவேல மரங்கள் அதிகரிக்க விவசாயத்தை கைவிடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இனியாவது பொதுப்பணித்துறையில் இக்கண்மாயை பராமரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.