நரிக்குடி : நீர்வரத்துக்காக கண்மாய் கரையை உடைத்ததால் நரிக்குடியில் இரு கிராமத்தினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதை அதிகாரிகள் சமரசம் செய்து வைத்தனர்.
நரிக்குடி டி.கடம்பன்குளம் கண்மாய் நிறைந்ததை அடுத்து நெல் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அருகில் உள்ள சின்ன கண்ணனூர் கண்மாய் நிறையாததால் 50க்கும் மேற்பட்ட அக்கிராமத்தினர் திரண்டு தண்ணீரை கொண்டு செல்ல கண்மாய் கரையை உடைத்தனர். அளவுக்கு அதிகமான தண்ணீர் வெளியேறியதால் அருகில் உள்ள வயல் வெளிகளில் தண்ணீர் பாய்ந்து நெற்பயிர்கள் மூழ்கின.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.கடம்பன்குளம் கிராமத்தினர் திரண்டனர். பிரச்சனை ஏற்படும் என்பதை அறிந்து அதிகாரிகள் தலையிட்டு சமரசம் செய்தனர். "கண்மாய் நிறைந்து கழுங்கு வழியாக வரும் உபரி நீரை தான் கொண்டு செல்ல வேண்டும். முன்னறிவிப்பு இன்றி கரையை உடைத்ததற்கு, சின்னகண்ணனூர் கிராமத்தினரே கரையை அடைத்து தர வேண்டும்," என டி.கடம்பன்குளம் கிராமத்தினர் வலியுறுத்தினர். "உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து இரு கிராமத்தினரும் கலைந்து சென்றனர்.