விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதோர், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 88 ஆயிரத்து 289 பேரிடம் 1.91 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது ஒற்றை இலக்கத்தில் குறைந்துள்ளது. இதுவரை 46 ஆயிரத்து 18 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 357 பேர் இறந்துள்ளனர்.மேலும், நோயில் இருந்து குணமடைந்த 45 ஆயிரத்து 615 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 46 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் செல்வோர், சமூக இடைவெளியே கடைபிடிக்காதோருக்கு போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.அதன்படி, முகக் கவசம் அணியாதோருக்கு 200 ரூபாய், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.இதில், நேற்று முன்தினம் வரை முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் சென்ற மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 88 ஆயிரத்து 289 பேர் மீது வழக்கு பதிந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடமிருந்து ஒரு கோடியே 91 லட்சத்து 74 ஆயிரத்து 900 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.தற்போது, கொரோனா தொடர்பான அச்சம் பொதுமக்களிடையே பெரும்பாலும் இல்லை. இதனால், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றும் அரசின் உத்தரவு காற்றில் பறந்து போனது.எனவே, கொரோனா விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.