மாங்காடு---அமைச்சர் அன்பரசன் தொகுதிக்குட்பட்ட, மவுலிவாக்கத்தில், மழை நீரை அகற்றும் பணியை துரித்தப்படுத்தாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் இரண்டாவது நாளாக நேற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மவுலிவாக்கம் ஊராட்சியில், தனலட்சுமி, மகாலட்சுமி நகர்கள் மற்றும் பொன்னியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில், இடுப்பளவிற்கு மழை நீர் தேங்கி உள்ளது.பலர் வீடுகளை பூட்டிவிட்டு, உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஒரு சிலர், அந்த அங்கேயே வசித்து வருகின்றனர்.குடியிருப்புகளில் தேங்கிய மழை நீரை அகற்ற, முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, நேற்று முன்தினம், 100க்கும் மேற்பட்டோர் மவுலிவாக்கம் -- மாங்காடு சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.இவ்வூராட்சி, அமைச்சர் அன்பரசனின் ஆலந்துார் தொகுதிக்குட்பட்டது என்பதால், அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சு நடத்தினர்.பின், அவ்வழியாக செல்லும் கால்வாயை உடைத்து, மழை நீரை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.இந்நிலையில், மழைநீர் அகற்றும் பணியை துரிதப்படுத்தாத அதிகாரிகளை கண்டித்து, அப்பகுதி மக்கள், இரண்டாவது நாளாக, நேற்று, பெருங்களத்துார்- - மதுரவாயல் புறவழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன், போலீசார் பேச்சு நடத்தினர்.இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டதால், மழை நீரை வெளியேற்ற பெயருக்காக கால்வாயை உடைத்தனர். அதன் பின், பணியை துரித்தப்படுத்தவில்லை. குன்றத்துார் தாசில்தார், பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளை காது கொடுத்துக்கூட கேட்பதில்லை. நாங்கள் படும் துயரத்தை, தண்ணீருக்குள் நடந்து வந்து பார்த்தால் தான் தெரியும்.ஆனால், தாசில்தாரோ, காரில் இருந்து இறங்கி, அப்படிய நின்று விட்டு சென்று விடுகிறார். மாவட்ட ஊராட்சி தலைவர் மனோகரன், இப்பகுதிகளை பார்வையிட்டு, நடவடிக்கை எடுப்பதா கூறினார். அவரும் எதுவும் செய்யவில்லை. முதல்வர் நேரடியாக தலையிட்டு, எங்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.