போரூர்-போக்குவரத்திற்கு லாயக்கற்ற அணுகு சாலையை, சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.மவுன்ட்- -- பூந்தமல்லி சாலை, ஆற்காடு சாலை சந்திக்கும் இடமாக, போரூர் ரவுண்டானா உள்ளது. இச்சாலை, பெங்களூரு நெடுஞ்சாலையையும், ஜி.எஸ்.டி., சாலையையும் இணைக்கும் முக்கிய சாலையாகும்.அதேபோல், குன்றத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள பல பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், ஆற்காடு சாலையை பயன்படுத்தி சென்னை நகருக்குள் செல்கின்றன.இதை தவிர்க்க, போரூர் ரவுண்டானாவில் எப்போது, போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதையடுத்து, 2010ல் மேம்பால பணிகள் துவங்கப்பட்டு, 2017ல் முடிக்கப்பட்டன.மேம்பாலத்தின் கீழ், பூந்தமல்லி -- மவுன்ட் செல்லும் சர்வீஸ் சாலை உள்ளது. இச்சாலை குண்டும் குழியுமாக இருந்தது. சமீபத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக தடுமாறுகின்றனர்.விபத்து உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விழித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்தனர்.