திருப்போரூர்-அரசுக்கு சொந்தமான, 1.20 கோடி ரூபாய் மதிப்புடைய 10 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம், அச்சரவாக்கத்தில் மீட்கப்பட்டது.திருப்போரூர் அடுத்த அச்சரவாக்கம் கிராமத்தில், சர்வே எண்: 271ல், அரசுக்கு சொந்தமான 10 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்தனர்.இது தொடர்பான புகாரையடுத்து, திருப்போரூர் தாசில்தார் ராஜன், வருவாய் ஆய்வாளர் புஷ்பராணி, மேற்கண்ட இடத்தை ஆய்வு செய்தனர். அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, கற்கள் நடப்பட்டிருந்தன.போலீசார் உதவியுடன், வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றி மீட்டனர். அங்கு அரசு நிலம் என, அறிவிப்பு பதாகை வைத்தனர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு 1.20 கோடி ரூபாய் என, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.