உத்திரமேரூர்-ஓயாது கொட்டிய வடகிழக்கு பருவமழையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிகின்றன. ஆனால், சாத்தணஞ்சேரி ஏரி மட்டும் நிரம்பாமல் இருப்பது, அதிகாரிகள் அலட்சியப்போக்கை காட்டுவதாக, விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
25 ஆண்டுகளாக ஏரி நிரம்பாதது, விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.வடகிழக்கு பருவமழை மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் வந்த மழை நீரால் காஞ்சிபுரம் பாலாற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது.ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், உத்திரமேரூர் தாலுகா எல்லையில், பல ஏரிகளை நிரப்பிய வெள்ள நீர், குடியிருப்பு, வயல் என அனைத்து இடங்களையும் சூழ்ந்தது. மாவட்டத்தின் 95 சதவீத ஏரிகள் நிரம்பியுள்ளன.நிரம்பிய ஏரிகளில் வழிந்தோடிய தண்ணீரை, நிரம்பாத ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைக்கு திருப்பி விடுவதில் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால், பெரு மழை பெய்தும் சில ஏரிகளில் நீர் நிரம்பவில்லை.உத்திரமேரூர் ஒன்றியம், சாத்தணஞ்சேரியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, 110 ஏக்கர் பரப்பில் ஏரி உள்ளது. இந்த ஏரி முழுமையாக நிரம்பினால், சாத்தணஞ்சேரி மற்றும் சீட்டணஞ்சேரி கிராமங்களில், 280 ஏக்கர் பரப்பில் விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.கடந்த 2020 - -21ம் ஆண்டில், குடிமராமத்து திட்டத்தின் கீழ், 68.70 லட்சம் ரூபாய் செலவில், ஏரியில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், சமீபத்தில் பெய்த தொடர் மழையில் இந்த ஏரி, பாதியளவுகூட நிரம்பவில்லை.வெள்ள நீரை முறையாக மடைமாற்றி, சாத்தணஞ்சேரி ஏரி நீர்வரத்து கால்வாய்களை சீரமைத்திருந்தால், ஏரி நிரம்பியிருக்கும். இரு போகம் விளைவிக்க தண்ணீர் வசதி இருந்திருக்கும். அதிகாரிகள் அலட்சியத்தால் தான் ஏரி நிரம்பவில்லை என, விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.விவசாயி வேணு கூறியதாவது:சாத்தணஞ்சேரி ஏரிக்கு பாலாற்றில் இருந்து பினாயூர் வழியாக செல்லும் நீர்வரத்து கால்வாய் உள்ளது. ஏரி நிரம்ப இக்கால்வாய் முக்கிய நீர் ஆதாரம். இந்த கால்வாய் பல இடங்களில் துார்ந்தும், அடைப்புகள் ஏற்பட்டும் உள்ளது. பினாயூர், சாத்தணஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், இக்கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.இதனால், ஏரிக்கு பாலாற்று நீர்வரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. பாலாற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும், சாத்தணஞ்சேரி ஏரி நிரம்பாதது வேதனையாக உள்ளது.கடந்த 10 நாட்களுக்கு முன், விவசாயிகள் ஒன்றிணைந்து, சீட்டணஞ்சேரி அருகே, பாலாற்று நீர்வரத்து கால்வாய் உடைப்பு பகுதியில், மணல் மூட்டைகளை கட்டிபோட்டோம். இதனால் தற்போது, ஓரளவுக்கு தண்ணீர் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
உத்திரமேரூர் ஒன்றிய பொதுப்பணித் துறையின், ஏரிநீர் பாசன பிரிவு செயற்பொறியாளர் ஜான் கூறியதாவது:சமீபத்தில் ஆழப்படுத்திய ஏரிகளில், சாத்தணஞ்சேரி ஏரியும் ஒன்று. தற்போது ஏரிக்கு நீர் வருகிறது. ஏரி நிரம்பாதற்கான காரணங்கள் கண்டறிந்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.