திருவெண்ணெய்நல்லுார் : மானிய கடன் வாங்கித் தருவதாகக் கூறி 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா சண்முகம், 40; இவருக்கு சென்னை, பட்டாபிராம், ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்த லட்சுமி காந்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.அவரிடம், தான் தேசிய வேளாண்மை வளர்ச்சி நிறுவனம் மற்றும் சிறுகுறு தொழில் திட்ட தலைமை செயலாளராக இருப்பதாக கூறியுள்ளார். மானிய கடன் வாங்கி தருவதாகக் கூறி 1 லட்சத்து 85 ஆயிரத்து 350 ரூபாயும், குன்றத்துாரைச் சேர்ந்த சண்முகம் என்பவரிடம் 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வாங்கியவர் தலைமறைவானார்.
பணம் கொடுத்தவர்கள் ராஜா சண்முகத்தை பல இடங்களில் தேடி வந்துள்ளனர். அதில், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர் கூட்ரோடு பகுதியில் ராஜா சண்முகம் அலுவலகம் வைத்திருப்பது தெரியவந்தது.இதையெடுத்து லட்சுமிகாந்தி திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்த அவரது அலுவலகத்திற்கு சென்றனர். இதனையறிந்த அவர் தலைமறைவானார்.
அவரது அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ,அட்வகேட் ஸ்டிக்கர் ஒட்டியிருந்த, மகேந்திரா எக்ஸ்யூவி காரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.மேலும், தலைமறைவான ராஜா சண்முகத்தை தேடி வருகின்றனர்.இவர் மீது மதுரை உட்பட பல்வேறு பகுதியில் மோசடி வழக்குகள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.